கும்பகோணம்: கும்பகோணம் வருவாய் துறை சார்பில், தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரி மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகியவை இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தின.
இப்பேரணியை கும்பகோணம் வட்டாட்சியர் பூங்கொடி தலைமை தாங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். இதயா மகளிர் கல்லூரி முதல்வர் யூஜின் அமலா மற்றும் கல்லூரி செயலாளர் அமலபற்பமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பகோணம் ரெட் கிராஸ் தலைவர் ரொசாரியோ வாழ்த்துரை வழங்கினார். பேரிடர் மேலாண்மை முதன்மை பயிற்றுநர் மா. கணேசன் இவ்விழாவை ஒருங்கிணைத்தார். மண்டல வட்டாட்சியர்கள் வெங்கடேசன் மற்றும் வாசுதேவன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பேரணியின் தொடக்கத்தில், 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும், கடைகள் மற்றும் முக்கிய பொது இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மகாமக குளக்கரையில் தொடங்கிய இப்பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காந்தி பூங்காவை வந்தடைந்தது. இதில் இதயா மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட (NSS) மாணவிகள், லிட்ரசி கிளப் மாணவிகள், கும்பகோணம் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.